ad b

கணினியில் பல பைல்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

விண்டோஸ் இயக்கத்தில், பல ஆண்டுகள் இயங்கி, அனுபவம் பெற்றவர்கள் கூட, சில செயல்பாடுகளுக்கான வழிகளை மறந்து விடுகிறார்கள் அல்லது அவற்றைத் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். பைல்களைக் கையாள்வதில், நாம் சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களத் தேர்ந்தெடுத்து, காப்பி, நகர்த்த அல்லது நீக்க வேண்டியுள்ளது. 

மொத்த பைல்களையும் தேர்ந்தெடுக்கப் பல வழிகளை விண்டோஸ் தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.
போல்டர் ஒன்றில், அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுக்க Ctrl+A கீகளை அழுத்தினால் போதும். தொடர்ச்சியாக உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் தேர்ந்தெடுக்க, முதல் பைலை முதலில் தேர்ந்தெடுத்துப் பின்னர், ஷிப்ட் கீயை அழுத்தியவாறு, கடைசி பைலைத் தேர்ந்தெடுத்தால், இடையே உள்ள அனைத்து பைல்களும் சேர்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்.
ஆனால், தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பைல்கள், போல்டரில் சிதறிக் கிடந்தால், தொடர்பு இன்றி, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தால், அவற்றை அதன் வகை அடிப்படையில், தேர்ந்தெடுக்கலாம். போல்டரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Group by>Type என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக் காட்டாக .png என்ற துணைப் பெயரில் உள்ள அனைத்து பைல்களையும் வகைப்படுத்த, இந்த மெனு கட்டளையைப் பயன்படுத்தலாம். அதே போல, குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் திருத்திய பைல்களைத் தேர்ந்தெடுக்க, Group by>Date என்ற கட்டளையைப் பயன்படுத்தலாம். வேறு சில ஆப்ஷன் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், Group by>More என்ற கட்டளையைப் பயன்படுத்தலாம். பைல்களை குரூப் செய்த பின்னர், இந்த குரூப்பிற்கு மேலாக உள்ள கோட்டில் கிளிக் செய்தால், அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும்.
சில வேளைகளில், நாம் விரும்பும் பைல்கள் பல்வகை பைல்களாக இருந்தால், அவற்றை ஒரே வகையாக அமைத்துத் தேர்ந்தெடுக்க இயலாது. அந்த நேரத்தில், தேர்ந்தெடுக்க வேண்டிய பைல்களில், முதல் பைலைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, விரும்பும் பைல்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுக் காட்டப்படும். பின்னர், இந்த தொகுதியில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், இவற்றை காப்பி, நகர்த்துவது மற்றும் நீக்குவதற்கான வழிகளை மேற்கொள்ளலாம். இங்கு கிடைக்கும் வழிகளையும், அவற்றை மேற்கொள்கையில் நடைபெறும் செயல்களையும் காணலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பைல்களின் தொகுதியை, அப்படியே இழுத்து, அதே ட்ரைவில் உள்ள இன்னொரு போல்டரில் விட்டுவிட்டால், விண்டோஸ் அந்த பைல்களை அங்கு நகர்த்திக் கொள்ளும்.
இன்னொரு ட்ரைவிற்குத் தேர்ந்தெடுத்த பைல்களை நகர்த்தினால், விண்டோஸ் அவற்றை அங்கு காப்பி செய்திடும்.
பைல்களை இழுத்துச் சென்று விடுகையில், கண்ட்ரோல் கீயினை தொடர்ந்து அழுத்திக் கொண்டிருந்தால், விண்டோஸ் அந்த பைல்களை, சேரும் இடம் எந்த ட்ரைவாக இருந்தாலும், காப்பி செய்துவிடும்.
ஷிப்ட் கீயினை அழுத்தி இழுத்தால், விண்டோஸ் அடுத்த ட்ரைவிற்கு, பைல்களை நகர்த்தும்.
இவ்வாறு இல்லாமல், மவுஸ் ரைட் பட்டன் அழுத்தினால், நீங்கள் தேர்ந்தெடுக்க மெனு ஒன்று தரப்படும். இதில் நீங்கள் விரும்பும் செயலாக்கத்திற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்.