ad b

வைரஸ் பாதித்த கணினியை இயக்குவது எப்படி?

விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்று, மால்வேர் அல்லது வைரஸினால், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டால், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்குவதில் எந்த மாற்றமும், தீர்வும் கிடைக்காது. 




ஏனென்றால், அந்த மால்வேர் அல்லது வைரஸ், முதலில் உங்கள் ஆண்ட்டி வைரஸ் இயக்கத்தினைத்தான் முடக்கும். சில மால்வேர் புரோகிராம்கள், தங்களை எந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும் கண்டறிய முடியாதபடி பதுங்கிக் கொள்ளும். சில, ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைச் சரியாகச் செயல்பட விடாமல் தடுக்கும். புதியதாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திட முயன்றாலும், அது தடுக்கப்படும். எனவே, கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் சிஸ்டத்தினை வெளியே இருந்து இயக்கினால்தான், மால்வேர் புரோகிராமின் தாக்குதலில் இருந்து விடுபட முடியும். இதற்கான தீர்வுகளை, அவற்றைப் பெற நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகளை இங்கு காணலாம்.
1. சேப் மோட்: இந்த வழி, விண்டோஸ் இயக்கத்திலிருந்து வெளியே இருந்து செயல்படும் வகை அல்ல. மால்வேர் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரை மிகத் தீவிரமாகப் பாதித்திருந்தால், இந்த வழியில் அதனைச் சரி செய்திட முடியாது. இந்த வகையில் பூட் செய்திட்டால், தர்ட் பார்ட்டி புரோகிராம் எதுவும் தொடக்கத்திலேயே இயங்காது. எனவே, சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்குகையில், மால்வேர் புரோகிராம் இயங்காது.
இந்த குறைந்த புரோகிராம்கள் இயங்கும் சேப் மோட் சூழ்நிலையில், நீங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திடலாம். அதனைக் கொண்டு மால்வேர் இருப்பதனை ஸ்கேன் செய்து அறியலாம். அறிந்து அழிக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் கொண்டு, மால்வேர் ஒன்றை அழித்த பின்னரும், மீண்டும் கம்ப்யூட்டர் பூட் ஆகும்போது, மால்வேர் தலைகாட்டுகிறது என்றால், சேப் மோடில் பூட் செய்து, கம்ப்யூட்டரைச் சரி செய்திட முயற்சிக்க வேண்டும்.
விண்டோஸ் 7 அல்லது அதற்கு முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில், சேப் மோடில் நுழைய, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடத் தொடங்கியவுடன், F8 கீயை அடுத்தடுத்து தட்ட வேண்டும். கருப்பு திரையில் நெட்வொர்க்கிங் திரை காட்டப்பட்டு, எப்படி விண்டோஸ் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் Safe Mode அல்லது Safe Mode with Networking என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தால், இணையத்திலிருந்து புதிய ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பெற்று, இன்ஸ்டால் செய்து, தொடர்ந்து அதனை இயக்கி, மால்வேர் புரோகிராம்களை நீக்கலாம்.
2. ஆண்ட்டி வைரஸ் பூட் டிஸ்க்: ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள், உங்கள் கம்ப்யூட்டரை பழுது பார்க்கவும், ஸ்கேன் செய்திடவும் பூட் டிஸ்க்குகளை உருவாக்கும் வழிகளைத் த்ருகின்றன. இந்த டூல்களை ஒரு சிடி அல்லது டிவிடியில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். அல்லது யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பின்னர், அதன் மூலம் கம்ப்யூட்டரை பூட் செய்தால், ஆண்ட்டி வைரஸ் நிலை ஒன்றில் கம்ப்யூட்டர் பூட் ஆகும். இதன் மூலம் கம்ப்யூட்டரை சரி செய்திடலாம். மால்வேர்களை நீக்கலாம்.
3. லினக்ஸ் சிடி வழியாக: உங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டரை, லினக்ஸ் சிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் ஸ்கேன் செய்திடலாம். எடுத்துக்காட்டாக, உங்களிடன் உபுண்டு லினக்ஸ் இன்ஸ்டால் செய்திடக் கூடிய சி.டி. இருதால், அல்லது அது கொண்ட யு.எஸ்.பி. ட்ரைவ் இருந்தால், அதன் வழியாகக் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடலாம். உபுண்டு லினக்ஸ் வழியாகக் கம்ப்யூட்டர் பூட் ஆகும். இப்போது லினக்ஸ் டெஸ்க்டாப் சூழ்நிலை உங்கள் கம்ப்யூட்டரில் கிடைக்கும். இதிலிருந்து, ஓப்பன் சோர்ஸ் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் (எ.கா. ClamAV/ClamTk) ஒன்றை இன்ஸ்டால் செய்திடலாம். அல்லது வர்த்தக ரீதியாக லினக்ஸ் சிஸ்டத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஒன்றை (AVG for Linux) இன்ஸ்டால் செய்திடலாம். இனி, லினக்ஸ் இயக்கத்தில் இருந்து கொண்டே, இதன் வழி இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பின் மூலம் மால்வேர் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கலாம்.
4. ஹார்ட் ட்ரைவினை நீக்கி சோதனை: உங்களிடம் இன்னொரு கம்ப்யூட்டர் இருந்து, அதில் ஹார்ட் ட்ரைவினை, வெளியில் இருந்தவாறே இணைக்கும் வசதி இருந்தால், பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவைக் கழட்டி, அதில் இணைக்கவும். இப்போது, அதில் உள்ள அனைத்து பைல்களையும், புதிய கம்ப்யூட்டர் சிஸ்டம் மூலம் காண இயலும். புதிய கம்ப்யூட்டர், லினக்ஸ், விண்டோஸ் அல்லது மேக் ஓ.எஸ்.எக்ஸ் என எந்த சிஸ்டத்தில் இயங்குவதாகவும் இருக்கலாம். இங்கும் புதிய ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஒன்றை இன்ஸ்டால் செய்து, அதன் மூலம், மால்வேர்களைக் கண்டறிந்து நீக்கலாம்.
மேலே பரிந்துரைக்கப்பட்ட வழிகள் அனைத்தும், நீங்கள் மால்வேர் புரோகிராமின் இயக்கத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் தரப்பட்டதாகும். அதனால், பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டருக்குள்ளேயே இருந்து போராடுவதைக் காட்டிலும் இவை சிறந்த வழிகளாகும்.
இந்த வழிகளில், கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர் புரோகிராம்களை நீக்குவதனாலேயே, அனைத்து மால்வேர் புரோகிராம்களும் நீக்கப்பட்டுவிட்டன என்று நாம் அமைதியடைய முடியாது. ஒரு சில மால்வேர் புரோகிராம்கள், குறிப்பிட்ட நாட்கள் கழித்து இயங்குபவையாக, உங்கள் கம்ப்யூட்டரிலேயே தங்கி இருக்கலாம். எனவே, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் பதிவதே நல்லது. இது உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.