ad b

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தெரிந்த செய்தி தெரியாத தகவல்















மைக்ரோசாப்ட் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கான சப்போர்ட் பைல்கள் தருவதனை நிறுத்துகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இது 
குறித்து வெளியிட்டுள்ள தெளிவான தகவல் தொகுப்பு இங்கு தரப்படுகிறது.

இந்த அறிவிப்பு மைக்ரோசாப்ட் மென்பொருட்களுக்கான துணை மென்பொருட்கள் தயாரிக்கும் டெவலப்பர்களுக்கென தரப்பட்டுள்ளது. விண்டோஸ் எக்ஸ்பியுடன் பயன்படுத்தக் கூடிய அதிக பட்ச மேபடுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான சப்போர்ட் நிறுத்தப்படுகிறது. உடனடியாக, பிரவுசர்கள் இயங்குவது நிறுத்தப்படும் என்பது பொருளல்ல. இதற்கான பாதுகாப்பிற்கான கூடுதல் பேட்ச் பைல்கள் தருவது நிறுத்தப்படும். இதனைப் பயன்படுத்துவதில் ஏற்படும் பாதகங்களுக்கு, விளைவுகளுக்கு மைக்ரோசாப்ட் பொறுப்பேற்காது. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களிடமிருந்து இவற்றைப் பாதுகாக்கும் எந்தவித நடவடிக்கைகளிலும் மைக்ரோசாப்ட் ஈடுபடாது. 

2016
ஜனவரி முதல் கீழே தரப்பட்டுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், அதனுடன் குறிக்கப்பட்டிருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளே சப்போர்ட் செய்யப்படும். பாதுகாக்கப்படும்.

1.
விண்டோஸ் விஸ்டா எஸ்.பி.2: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9
2. விண்டோஸ் சர்வர் 2008 எஸ்.பி. 2: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9
3. விண்டோஸ் 7 எஸ்.பி.1: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11
4. விண்டோஸ் சர்வர் 2008 எஸ்.பி. 1: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11
5. விண்டோஸ் 8.1: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11
6. விண்டோஸ் சர்வர் 2012: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10
7. விண்டோஸ் சர்வர் 2012: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11

மேலே தரப்பட்டுள்ள முடிவுகளுக்கு, பாதுகாப்பே காரணம் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இன்றைய நிலையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, 69% தான் பாதுகாப்பானது, ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11, 99% பாதுகாப்பானது. தர்ட் பார்ட்டி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பிற்கான பேட்ச் பைல்களும் கிடைக்காது. அவை பாதுகாப்பினையும் தராது. ஏனென்றால், எப்படிப்பட்ட பைல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைத் தகவல்களை, இந்த நிறுவனங்களுக்கு மைக்ரோசாப்ட் தான் வழங்கி வந்த்து. அவை நிறுத்தப்பட்டுள்ளன. 

மேலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் புதிய பதிப்பு, தற்போதைய இணைய இயக்க தகுதி வரைமுறைகளுடன் இணைந்து இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது என்றும், அதனால், தற்போது இயங்கும் அனைத்து அப்ளிகேஷன்களும் இதில் இயங்கும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய பதிப்பினைப் பயன்படுத்துவதால், வரக்கூடிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்குவது எளிதாக இருக்கும் என்று நினைவு படுத்தியுள்ளது. ஏனென்றால், வரும் ஆண்டுகளில் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களுக்கான சப்போர்ட் நிறுத்தப்பட இருக்கிறது. 

உங்களுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், தற்போதைய தேவைகளுக்கேற்ப அப்டேட் செய்யப்பட வேண்டும் எனில், அதனைத் தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட் செய்திடுதல் வேண்டும். 

அண்மையில் NetMarketShare அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, இணையத்தை வலம் வர 22% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் 17% மட்டுமே. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 மற்றும் 9 ஆகியவை 15% கம்ப்யூட்டர்களில் இயங்குகின்றன. புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுக்கு மாற விரும்பாதவர்கள், குரோம் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துவதே நல்லது.