ad b

Excel Tips:

எக்ஸெல் சமக்குறியீடு மாற்றம்: எக்ஸெல் பழைய பதிப்பிலிருந்து புதிய எக்ஸெல் 2007க்கு மாறியுள்ளீர்களா? அப்படியானால், பார்முலா 
பாரின் அருகே உள்ள டூல்ஸ் பிரிவில் சிறிய மாற்றத்தினைக் கவனிக்கலாம். உங்களுடைய பழைய பதிப்பில், பார்முலா பாருக்கு அடுத்தபடியாக ஒரு சமக்குறி அடையாளத்தினை (equal sign) இருந்திருக்கும். நீங்களாக அதனை அமைக்க வேண்டியதில்லை. இதில் கிளிக் செய்தால், ஒரு செல்லில் என்ன இருந்தாலும், அதனை நீக்காமல், அதன் முன்னதாக ஒரு சமக்குறி அடையாளத்தினை அமைக்கும்.

இந்த சமக்குறி அடையாளம், எக்ஸெல் 2007ல் இருக்காது. இது எக்ஸெல் 2002 பதிப்பில் இருந்தே நீக்கப்பட்டது. நீங்கள் விரும்பினால், குயிக் அக்செஸ் டூல்பாரில் ஒரு சமக்குறியினை இணைக்கலாம். கீழ்க்கண்ட செயல்முறையினை மேற்கொள்ளவும். 



1. ஆபீஸ் பட்டனை கிளிக் செய்து, பின்னர் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் Excel Options டயலாக் பாக்ஸினைக் காட்டும். 
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது புறம் உள்ள Customize என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். 
3. கீழ்விரி மெனுவில், Choose Commands என்பதனைப் பயன்படுத்தி, Commands Not In The Ribbon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு கிடைக்கும் Commands பட்டியலில், சமக்குறி அடையாளத்தினை (equal sign)க் காணவும்.
5. அடுத்து Add என்பதில் கிளிக் செய்திட வும். இப்போது இந்த டூல் டயலாக் பாக்ஸின் வலது பக்கத்திற்கு நகர்த்தப் பட்டிருக்கும்.
6. பின்னர், ஓகே கிளிக் செய்து Excel Options dialog box மூடவும். இப்போது இந்த டூல் Quick Access Toolbarல் இருக்கும். 

இந்த சமக்குறி டூலினை பார்முலா பாரின் தொடக்கத்தில் அமைத்திடப் பயன்படுத்தலாம். இது முந்தைய பதிப்பில் பயன்பட்டது போல செயல்படாது. ஒரு செல்லில் இருக்கும் டேட்டாவின் முன் அமையாது. பார்முலா பாரை அடுத்து வலதுபுறமும் அமைக்க முடியாது.

தேதியும் நேரமும்: எக்ஸெல் தொகுப்பின் ஒர்க் ஷீட் ஒன்றில் உள்ள செல்லில் அன்றைய தேதியை இட விரும்பினால் Ctrl + ; (semicolon) என்ற கீகளை அழுத்தவும். நேரத்தை இட விரும்பினால் Ctrl + Shift + : (colon) என்ற கீகளைஅழுத்தவும்.

எக்ஸெல் நெட்டு வரிசை, படுக்கை வரிசை மாற்றம்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். இதனை எப்படி மாற்றுவது? நான்கு அல்லது பத்து செல்கள் என்றால் ஒவ்வொன்றாக டைப் செய்துவிடலாம் என்று நீங்கள் முயற்சிக்கலாம். இதுவே அதிகமான எண்ணிக்கையில் செல்கள் உள்ள ஒர்க் ஷீட்டாக இருந்தால் என்ன செய்வது?

எக்ஸெல் இதற்கு அருமையான ஒரு வழி தந்துள்ளது. எந்த செல்களில் உள்ளதை மாற்ற வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அந்த செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுங்கள். பின் கண்ட்ரோல்+சி அழுத்தி காப்பி செய்திடுங்கள். அடுத்து எங்கு மாற்றத்துடன் வரிசையை அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் முதல் செல்லுக்குச் செல்லுங்கள். பின் ALT + E + S அழுத்துங்கள்.அல்லது எடிட் மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இப்போது பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் கீழாக ட்ரான்ஸ் போஸ் (Transpose) என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் எதிர்பார்த்தபடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.

எக்ஸெல் ஷார்ட் கட் கீகள்: காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shift+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

ஷிப்ட் + ஆரோ கீ (Shift+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும். 
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shift+ Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும். ஷிப்ட் + ஹோம் கீகள் (Shift+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shift+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப் படும். கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shift+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப் பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும். என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.