ad b

குரோம் பிரவுசருக்கு பாதுகாப்பு வழிகள்

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு வழிகளைத் தருவதனை, வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. இதனால், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், முன்னதாகவே, வேறு விண்டோஸ் சிஸ்டங் களுக்கு மாறி வருகின்றனர்.
ஆனல், இன்னும் சிலர், எக்ஸ்பி சிஸ்டத்திலேயே நாம் இயங்கிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் உள்ளனர்.





இந்நிலையில், கூகுள் நிறுவனம், எக்ஸ்பியில் தன் குரோம் பிரவுசர்களை இயக்கி வருபவர்களுக்கு, குரோம் பிரவுசருக்கு மட்டுமான பாதுகாப்பினை, 2015 ஏப்ரல் வரை வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளது.
இந்த ஏட்டிக்குப் போட்டி அறிவிப்புகளால், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மைக்ரோசாப்ட் தன் பங்கிற்கு, குரோம் பிரவுசருக்கு மட்டும் பாதுகாப்பு கிடைத்தாலும், எக்ஸ்பி சிஸ்டத்தில் பாதுகாப்பு தரும் பைல்கள் அப்டேட் செய்யப்படவில்லை என்றால், நிச்சயம் ஹேக்கர்கள், உள்ளே நுழையும் அபாயம் எப்போதும் உண்டு என்று தெரிவித்துள்ளது.
சென்ற 2001 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, வர்த்தக ரீதியாக விற்பனைக்குக் கொண்டு வந்தது. 2008 ஆம் ஆண்டில், இந்த விற்பனையை நிறுத்தியது. எக்ஸ்பி சிஸ்டத்திற்கான தொழில் நுட்ப ரீதியான உதவியை, மைக்ரோசாப்ட் அப்போதே நிறுத்திவிட்டது. இருப்பினும், தொடர்ந்து பாதுகாப்பு தரும் பைல்களை ஒவ்வொரு மாதமும் அப்டேட் செய்து வருகிறது. இதனையும் வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் வழங்கப் போவதில்லை என இறுதியாகவும், உறுதியாகவும் அறிவித்துள்ளது.
ஆனால், கூகுள் இதனை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. பல எக்ஸ்பி வாடிக்கையாளர்கள், குறிப்பாக நிறுவனங்கள், தாங்கள் பயன்படுத்தும் புரோகிராம்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டங்களில் சரியாக இயங்குவதில்லை எனத் தெரிவித்து, எக்ஸ்பி சிஸ்டங்களிலேயே அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்திலும் இதே போல் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
மால்வேர் புரோகிராம்கள், பெரும்பாலும், பிரவுசர்களையே குறிவைத்து வழி அமைப்பதால், தன் பிரவுசரான குரோம் பிரவுசரைப் பயன்படுத்துவோருக்குத் தான் பாதுகாப்பு வழிகளைத் தர கூகுள் முன்வந்துள்ளது. மைக்ரோசாப்ட் தரும் சப்போர்ட் நிறுத்தப்பட்ட பின்னர், ஓராண்டுக்கு இதனைத் தர கூகுள் அறிவித்துள்ளது.
இதன் மூலம் விண்டோஸ் எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்துவோர், தன் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த முன்வருவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது. 
ஆனால், பிரவுசர் அல்லாத வேறு வழிகளில் மால்வேர் புரோகிராம்கள் தங்கள் படையெடுப்பினை மேற்கொண்டால், என்ன செய்வது? மைக்ரோசாப்ட் கை கொடுக்காத வேளையில், எக்ஸ்பி பயன்படுத்துவோர் நிலை சற்று ஆபத்தானதுதான்.