ad b

பயணங்களில் லேப்டாப் கணினியை பராமரிப்பது எப்படி

டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, லேப் டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுவது இப்போது பழக்கமாகிவிட்டது. பயணங்களின் போது எடுத்துச் செல்வது என்பது நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. விமான நிலையமாக இருந்தாலும், விமானத்தின் உள்ளாக பயணிக்கும்போதும், இது ஓர் நல்ல துணையாக உள்ளது. 




அதே போல, ட்ரெயின், பஸ் பிரயாணங்களிலும் பயணிப்போர், தங்கள் பொழுது போக்குத் துணைவனாகவும், அலுவலக சாதனமாகவும் லேப் டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். நம் கால், கை போல நம்முடன் இணைந்திருக்காவிட்டாலும், நம்முடனேயே லேப்டாப் எப்போதும் பயணிக்கிறது. ஆனால், இதனைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துகின்றனரா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. இங்கு அதன் பாதுகாப்பான பயணத்திற்கான டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
இருபுறமும் பாதுகாப்பு: லேப்டாப் கம்ப்யூட்டரை சாதாரண லெதர் பேக், நூல்கள் எடுத்துச் செல்லும் பை, அல்லது இன்னும் மோசமாக, கைகளிலேயே, எடுத்துச் செல்வது பிரச்னையை வரவேற்கும் வழிகளாகும். இது ஒரு நுண்ணிய, மென்மையான சாதனம். எனவே எந்தப் புறம் இருந்தும் இதற்கு அதிர்ச்சி கிடைக்கக் கூடாது. நம் பயணம் என்பது, பைகளை இஷ்டத்திற்கு இடம் மாற்றி வைத்து எடுக்கும் பழக்கம் உள்ளதாக நாம் வைத்துள்ளோம். எனவே, லேப்டாப் கம்ப்யூட்டரை சாதாரண பையில் வைத்து எடுத்துச் சென்றால், பக்கத்தில் வைக்கப்படும் பைகளினால் கூட சேதம் ஏற்படலாம். எனவே, லேப்டாப் கொண்டு செல்ல எனத் தயாரிக்கப்பட்டு கிடைக்கும், இரு பக்கமும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட பைகளையே பயன்படுத்த வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டருக்கான பவர் கேபிள், மவுஸ் போன்ற துணை சாதனங்களை, கம்ப்யூட்டர் வைக்கப்பட்டுள்ள பைகளிலேயே வைத்திடாமல், தனியே ஒரு பையில் வைத்து எடுத்துச் செல்லலாம்; அல்லது கம்ப்யூட்டர் பையிலேயே ஒரு தனி இடம் ஒதுக்கி, அதில் வைத்து எடுத்துச் செல்லலாம். இதனால், கம்ப்யூட்டரில் எந்தக் கீறலும் ஏற்படாது. கம்ப்யூட்டர் பைகளில், உள்ளே கம்ப்யூட்டர் உள்ளது என்பதைக் காட்டும் நிறுவனங்களின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ள பைகளைத் தவிர்க்கவும். இது, இவற்றைத் திருட முயற்சிப்பவர்களுக்கு அடையாளம் காட்டும் வகையில் அமைந்துவிடும்.
கம்ப்யூட்டரை ஆப் செய்துவிடவும்: பலர் லேப்டாப் கம்ப்யூட்டரை ஹைபர்னேட் செய்த நிலையில், பயணத்தில் எடுத்துச் செல்வார்கள். இது தவறு. முழுமயாக மின் சக்தி நிறுத்தப்படாத நிலையில், தொடர்ந்து வெப்பம் வெளியாகும். இது, பையில் வைக்கப்பட்ட கம்ப்யூட்டரின் சாதனங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும். இறுக்கிப் பிடித்த நிலையில் வைக்கப்படும் கம்ப்யூட்டருக்கு நிச்சயம் வெப்பமானது, பாதிப்பை அதிகம் உண்டாக்கும். கம்ப்யூட்டரின் பயன் தரும் வாழ்நாளைக் குறைக்கும். எனவே, பையில் வைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே, கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் சக்தியை முழுமையாக நிறுத்தி வைக்கவும்.
கண்களை வைத்திருங்கள்: உங்கள் கண்கள் எப்போதும், லேப்டாப் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் பையின் மீது இருக்க வேண்டும். ஏனென்றால், திருடர்களுக்கு இது ஒரு நல்ல இனிப்பு மிட்டாய். தங்களுடைய கம்ப்யூட்டர் பையை எடுத்துச் செல்வது போல, எளிதாக அப்படியே எடுத்துச் செல்லும் திருடர்கள் உண்டு. எனவே, விமான நிலையம், பஸ் அல்லது ரயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் உங்கள் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும். பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு, பின் உங்கள் குழந்தை அல்லது மொபைல் போனால், கவனம் மாறி, அதனை இழக்கும் நிலையை உருவாக்க வேண்டாம்.
காரில் பயணிக்கும் போது, லேப்டாப் கம்ப்யூட்டரை மறைத்தே வைக்கவும். இருக்கைகளில் வைத்து எடுத்துச் சென்றால், மற்றவர்கள் பார்வையில் எளிதாகப் படும். பெட்ரோல், டீசல் நிரப்புகையில், திருடர்களின் கவனத்தை எளிதாக ஈர்க்கும். இருக்கைக்கு அடியில் பாதுகாப்பாக வைக்கலாம். காரை எப்போதும் பூட்டிய நிலையிலேயே வைக்கவும்.
பேக் அப் செய்து பூட்டவும்: உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் காணாமல் போனாலோ, திருடப்பட்டாலோ, அதனால் ஏற்படும் இழப்பு பணம் மட்டுமல்ல; அதில் உள்ள விலை மதிப்பில்லா தகவல்கள் அடங்கிய பைல்களும் தான். எனவே, எப்போது பயணத்தினை மேற்கொண்டாலும், முன்னதாக, அதில் உள்ள அனைத்து டேட்டாவிற்குமாக பேக் அப் எடுக்கும் பழக்கத்தினை மேற்கொள்ளவும். இந்த பேக் அப் டேட்டாவினை, அலுவலகத்தில் அல்லது வீட்டில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டரில் வைக்கலாம். அல்லது போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவில் பதியலாம். இதனால், லேப்டாப் கம்ப்யூட்டரை இழக்கும் நிலை வந்தால், நம் டேட்டா பாதுகாப்பாக நமக்குக் கிடைக்கும்.
நம் லேப்டாப் கம்ப்யூட்டர் திருடப்பட்டோ அல்லது எடுத்துச் செல்பவர் அறியாமலோ நம்மை விட்டுச் செல்கையில், அதனைக் கொண்டிருப்பவர் நம்மிடம் திருப்பித் தரும் முன்னர், அதில் உள்ள தகவல்களைக் காணலாம். நம் தனிப்பட்ட போட்டோக்கள், வங்கிக் கணக்குகள், வரி செலுத்திய படிவங்கள் எனப் பல முக்கிய தகவல்களை மற்றவர்கள் பார்க்க நேரிடலாம். இந்த நிலையைத் தவிர்க்க, கம்ப்யூட்டரை மற்றவர்கள் இயக்கமுடியாதபடி லாக் செய்து வைக்க வேண்டும். இதற்கு அளிக்கப்படும் பாஸ்வேர்ட், மற்றவர்கள் யாரும் எண்ணிப்பார்க்க இயலாத நிலையில் அமைக்கப்பட வேண்டும்.
பொது இடம் ஜாக்கிரதை: நாம் லேப்டாப் கம்ப்யூட்டருடன் பயணிக்கையில், பொது இடங்களில் உலவுகிறோம். அங்கே பொதுவான வை-பி நெட் வொர்க் செயல்படலாம். இவற்றின் மூலம் வைரஸ், மால்வேர் என நம் கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராம்கள் என எவையும் நுழையலாம். இதனைத் தடுக்க, நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை, எப்போதும் அப்டேட் செய்த நிலையில் வைக்கவும். இதே போல பயர்வால் புரோகிராம் ஒன்றையும் இயக்க நிலையில் அமைக்கவும். நமக்கு அறிமுகமில்லாத நெட்வொர்க்கில் இணைக்கப்படுகையில், கண்ணில் தென்படும் எதனையும் நம் விரோதி போலவே பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள். பொதுவான வை-பி நெட்வொர்க் இணைப்பில் இருக்கையில், வங்கி மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் எவற்றையும் பயன்படுத்த வேண்டாம். கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலையில், பாதுகாப்பான நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும் வரை காத்திருந்து பின்னர் பயன்படுத்தவும். அந்த நேரத்தில், நீங்கள் பயன்படுத்தும் இணைய முகவரியில், “https” என்ற முன் ஒற்று இருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். அதே போல, பிரவுசர் விண்டோவில், பூட்டு போட்டது போன்ற ஐகான் அட்ரஸ் பாரில் இருப்பதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த இரண்டும் நீங்கள் பாதுகாப்பான இணைய தளத்துடன் இணைந்துள்ளீர்கள் என்பதனை உறுதிப்படுத்தும்.
லேப்டாப் கம்ப்யூட்டரின் ஜாதகம்: இறுதியாக ஒன்று. உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கியவுடனேயே, அதன் சரியான தொழில் நுட்ப தகவல்கள், நிறுவனப் பெயர், மாடல் எண், சீரியல் மற்றும் சர்வீஸ் எண்கள் ஆகியவற்றைக் குறித்து, ஒன்றுக்கு இரண்டான இடங்களில் பதிந்து வைக்கவும். லேப்டாப் கம்ப்யூட்டர் திருடு போகும் பட்சத்தில், அதனை மீட்பதற்கு இவை உதவும்.
சில லேப்டாப் கம்ப்யூட்டர்களின் அடிப்பாகத்தில் இந்த தகவல்களுடன், பார் கோட் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இதனை உங்கள் போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு, அந்த பைலை, இன்னொரு கம்ப்யூட்டரில் பதிந்து வைப்பதுவும் நல்லது. உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரைத் தனிமைப்படுத்திக் காட்டும் ஏதேனும் அடையாளம் இருப்பின், அதனைத் தனியே குறித்து வைக்கவும். ஏதேனும் ஸ்டிக்கர், ஸ்கிராட்ச் மற்றும் சில கூடுதல் அடையாளங்கள் இருப்பின் குறித்து வைத்தால், அவற்றைக் கூறி நீங்கள் தான் அதன் உரிமையாளர் என உறுதிப்படுத்த உதவும்.
உங்கள் குடும்பத்துடன், விடுமுறையைக் கழிக்க, விழாக்களில் பங்கு கொள்ள, அலுவலகப் பணிகளை மேற்கொள்ள எனப் பயணம் செய்கையில் லேப்டாப் கம்ப்யூட்டர் ஓர் இன்றியமையாத சாதனமாகும். உங்கள் பயணம் இனியதாக, மகிழ்ச்சியாக மேற்கொள்ள மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும்.