ad b

மைக்ரோசாப்ட் ஆண்ட்டி வைரஸ்

வரும் ஏப்ரல் 8 முதல் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினை முழுமையாக நிறுத்தும் அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விண்டோஸ் இயங்கும் சிஸ்டங்களில், தன் பாதுகாப்பு புரோகிராமான Microsoft Security Essentials ஐ டவுண்லோட் செய்து இயக்கிக் கொள்ள அனுமதி தந்து வருகிறது. 




எக்ஸ்பிக்கு சப்போர்ட் நிறுத்திக் கொள்ளும் நாளுக்குப் பின்னர், எக்ஸ்பி இயங்கும் சிஸ்டங்கள் வழியாக, இதனை டவுண்லோட் செய்திட அனுமதி இல்லை என மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்த புரோகிராமிற்கு தொடர்ந்து அப்டேட் வழங்கி வரும் மைக்ரோசாப்ட், அவற்றையும் எக்ஸ்பி பயன்படுத்துவோருக்கு வழங்க முடியாது எனத் தெளிவாகக் கூறியது. அப்டேட் பைல்கள் இல்லாமல், செக்யூரிட்டி எசன்சியல் புரோகிராமினை இயக்குவது என்பது புத்திசாலித்தனமான நிலை அல்ல. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான சப்போர்ட் இல்லாவிட்டாலும், செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமிற்கான அப்டேட் பைல்களை டவுண்லோட் செய்து, ஓரளவிற்குப் பாதுகாப்பினைப் பெறலாம் என எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தவர்கள் எண்ணியிருந்தனர். இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் மைக்ரோசாப்ட் அறிவிப்பு இருந்தது. இதனால் எக்ஸ்பி வாடிக்கையாளர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது மைக்ரோசாப்ட் தன் நிலையைச் சற்று தளர்த்தியுள்ளது. எக்ஸ்பியிலிருந்து மாறுபவர்களின் நிலையைப் பாதுகாப்பாக வைத்திட, வரும் 2015 ஜூலை 14 வரை, செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமிற்கான ஆண்ட்டி மால்வேர் எதிர்ப்பு குறியீடுகளைத் தொடர்ந்து அப்டேட் செய்திடலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால், செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமினை முழுமையாக, புதியதாக டவுண்லோட் செய்பவர்கள், ஏப்ரல் 8க்குப் பின்னர் பெற முடியாது. இதனைத் தெளிவாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.